மாநகராட்சி கூட்டத்துக்கு மேயர் தாமதம் எதிர்கட்சிகள் அமளி; பா.ஜ., கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
மாநகராட்சி கூட்டத்துக்கு மேயர் தாமதம் எதிர்கட்சிகள் அமளி; பா.ஜ., கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 21, 2024 09:40 PM
புதுடில்லி:மாநகராட்சிக் கூட்டத்துக்கு மேயர் ஷெல்லி ஓபராய் தாமதமாக வந்ததால், எதிர்கட்சி கவுன்சிலர்கள் அமளி செய்தனர்.
டில்லி மாநகராட்சிக் கூட்டம் மேயர் ஷெல்லி ஓபராய் தலைமையில் நேற்று மதியம் நடந்தது. கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த மதியம் 2:00 மணிக்கு அனைத்துக் கவுன்சிலர்களும் வந்திருந்தனர். ஆனால், மேயர் ஷெல்லி ஓபராய், 2:50 மணிக்கு வந்தார். இதனால், மேயர் வரும்போது, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி கவுன்சிலர்கள் சபையின் மையப்பகுதியில் கூடி நின்ரு அமளி செய்தனர். இதையடுத்து, கூட்டம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் கூட்டம் துவங்கியது. அப்போதும் எதிர்கட்சி கவுன்சிலர்கள் 'மேயர் ஹே ஹை' மற்றும் 'ஊழல் மேயர் ராஜினாமா செய்ய வேண்டும்' என கோஷமிட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளி நீடித்ததால், சபை மேலும் 30 நிமிடங்களுக்கு இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.
பா.ஜ., கவுன்சிலர்கள் பங்கஜ் லுத்ரா, கஜேந்திர சிங் தலால் மற்றும் அமித் நாக்பால் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டார்.
கூட்டம் துவங்குவதற்கு முன், அரங்குக்கு வெளியே பா.ஜ., கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மாநகராட்சியில் தலித் மேயர் நியமனம் செய்யாமல் இருப்பது, குப்பைகளை அகற்றுவதில் தாமதம், நீர் நிலைகளில் தூர்வாராமல் இருப்பது மற்றும் நிலைக்குழு அமைப்பது ஆகிய பிரச்னைகள் குறித்து கோஷமிட்டனர். மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.