டாக்டர் கொலையில் தொடரும் போராட்டம் மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜினாமா
டாக்டர் கொலையில் தொடரும் போராட்டம் மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜினாமா
ADDED : ஆக 13, 2024 02:30 AM

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை கேட்டு, நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடையே, அவர் படித்த அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பதவி விலகினார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
புறக்கணிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில், சி.பி.ஐ., விசாரணை அல்லது நீதி விசாரணை கேட்டு, மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள், மாணவர்கள், பயிற்சி மாணவர்கள், மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, அந்த மருத்துவக் கல்லுாரியின் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதுவரை அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் பணியாற்றி வந்த பயிற்சி டாக்டர்கள், நேற்று அந்த பணியையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மாநிலம் முழுதும் மருத்துவக் கல்லுாரிகளில் போராட்டங்கள் நேற்று துவங்கின; தேசிய அளவில் போராட்டத்துக்கும், டாக்டர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்தி இல்லை
மாநில போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து, ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லுாரி முதல்வர் சந்தீப் கோஷ், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும் மருத்துவ சேவைகள் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டன. தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்த கொலைக்கு நீதி கேட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்களும் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.
சி.பி.ஐ., விசாரணைக்கு தயார்!
இந்த வழக்கில், மாநில போலீஸ் ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடிக்காவிட்டால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட தயாராக உள்ளோம். அதே நேரத்தில், சி.பி.ஐ., விசாரிக்கும் வழக்குகளில் தீர்வு காணப்படும் சதவீதம் மிகக் குறைவாக உள்ளதை கவனிக்க வேண்டும்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,