'28 தொகுதியில் ஜெயித்தால் மேகதாது திட்டம் சாத்தியம்'
'28 தொகுதியில் ஜெயித்தால் மேகதாது திட்டம் சாத்தியம்'
ADDED : ஏப் 21, 2024 06:14 AM

மாலுார்: ''மாநிலத்தில் 28 தொகுதிகளை கைப்பற்றினால், மோடியின் கையை பிடித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கேட்கும் சக்தி நமக்கு கிடைக்கும்,'' என ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
கோலார், மாலுாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பா.ஜ., - ம.ஜ.த., பிரசார கூட்டத்தில், தேவகவுடா பேசியதாவது:
லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், கர்நாடக காங்கிரஸ் அரசு கவிழும். அரசு கவிழ்ந்த பின் என்னிடம் வந்து கேளுங்கள். நான் பெங்களூரில், என் வீட்டில் தான் இருப்பேன். எங்கும் செல்ல மாட்டேன். அங்கு வந்து கேளுங்கள்; நான் பதிலளிக்கிறேன்.
காங்கிரசார் என்னென்ன செய்கின்றனர் என்பது எனக்கு தெரியும். முஸ்லிம்களுக்கு, வால்மீகி சமுதாயத்துக்கு, பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது யார். நான் எத்தனையோ எம்.எல்.சி.,க்களை உருவாக்கினேன்.
முதல்வர் சித்தராமையாவிடம், எந்த விதமான மதசார்பின்மை உள்ளது. தாக்கரேவிடம் சென்று சமரசம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெட்கம் இல்லையா. இப்படிப்பட்டவர் எங்கள் கட்சியை பற்றி பேசுகின்றார்.
நாட்டில் இரண்டு அணிகள் உள்ளன. ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணி; மற்றொன்று இண்டியா. பாதுகாப்பான அரசை அளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருக்கிறார். ஆனால் இண்டியா கூட்டணியின் தலைவர் யார்.
கோலாரில் ராகுலின் உரையை பற்றி, நான் கருத்து கூறவில்லை. ஆனால் அதிக வேகம் இருந்தால் கஷ்டம். நாட்டில் வலுவான அரசை கொடுக்கும் சக்தி, மோடியை தவிர வேறு யாரிடம் உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடகாவில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் கர்நாடகாவில், 28 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து, மாலுாருக்கு மேகதாது அல்லது கிருஷ்ணா நீரை கொண்டு வருவோம்.
இன்னும் இரண்டு ஆண்டுகள், ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருப்பேன். 28 தொகுதிகளை கைப்பற்றினால், மோடியின் கையை பிடித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கேட்கும் சக்தி நமக்கு கிடைக்கும். 28 எம்.பி.,க்களை வெற்றி பெற வையுங்கள். அனைவரையும், மோடியிடம் ஒன்றாக அழைத்து சென்று கேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

