மாதவிடாய்க்கு விடுமுறையா? சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு
மாதவிடாய்க்கு விடுமுறையா? சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு
ADDED : ஜூலை 09, 2024 01:03 AM
புதுடில்லி, 'மாதவிடாய் காலத்துக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசே முடிவு செய்ய முடியும். இதில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதவிடாய் காலத்துக்கு பெண்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான கொள்கைகளை உருவாக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தயங்கும் நிறுவனம்
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவிட்டதாவது:
இது மிகவும் முக்கியமான பிரச்னைதான். அதே நேரத்தில் இவ்வாறு விடுமுறை அளிப்பது, பெண்களுக்கு நல்லது செய்வதைவிட பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவ்வாறு விடுமுறை அளித்தால், பெண்களை அதிகளவில் வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்கள் தயங்கும்.
எப்படி இருப்பினும், இது கொள்கை முடிவு தொடர்பானது. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. அரசுகளே முடிவு எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டிடம், மனுதாரர் தன் கோரிக்கை மனுவை அளிக்கலாம்.
இந்த மனு தொடர்பாக விசாரித்து, ஒரு மாதிரி கொள்கையை உருவாக்குவது தொடர்பாக, ஆலோசனைகள் நடத்தி துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
இந்த பிரச்னையில் ஏற்கனவே சில மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை, இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
முன்னதாக, பள்ளி, கல்லுாரி மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க உத்தரவிடக் கோரி, கடந்த பிப்., மாதத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.
அப்போதும், கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
தற்போதைய நிலையில் பீஹாரில், பெண்களுக்கு இரண்டு நாள் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் நடைமுறை, 1992ல் இருந்து அமலில் உள்ளது.
கேரளாவில், மாணவியருக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கும் நடைமுறை, கடந்த ஜனவரியில் அமலுக்கு வந்தது.