ADDED : ஆக 08, 2024 11:53 PM

மைசூரு: ''மூடா முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பரப்புவதால், மனதளவில் முதல்வர் சித்தராமையா பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தோளோடு தோள் நிற்பேன்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் உருக்கமாக கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவர், இரண்டாவது முறையாக முதல்வர் ஆனதை, எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள், முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர்.
நான் தற்போது கட்சியின் மாநில தலைவராக உள்ளேன். அந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முதல்வருக்கு தோளோடு தோள் நிற்பேன். மூடா முறைகேட்டில் எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்யால், முதல்வர் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்.
முதல்வருக்கு எதிராக, பாதயாத்திரை நடத்த தேவை இல்லை. ம.ஜ.த., பாதயாத்திரையில் பங்கேற்காது என்று, குமாரசாமி கூறினார். ஆனால் மத்திய அமைச்சர் பதவி பறிபோகும் என்ற பயத்தில், பாதயாத்திரையில் கலந்து கொள்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பர். அந்த நிலையில் தற்போது பா.ஜ., - ம.ஜ.த., உள்ளது. ஊழல் செய்தவர்கள் பாவத்தை போக்க பாதயாத்திரை நடத்துகின்றனர்.
பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல்கள், குமாரசாமியின் குடும்பத்தினர் செய்த ஊழல்கள் பற்றி மக்களுக்கு தெரிவிப்போம். பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு எதிராக நாங்களே போராடுகிறோம். நீங்கள் மைசூரு மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று முதல்வரிடம் கேட்டு கொண்டேன். ஆயினும் மாநாட்டில் சில விஷயங்களை கூற வேண்டும் என்று, என்னிடம் கூறி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.