ADDED : ஆக 29, 2024 02:34 AM

மைசூரு : மைசூரு தசரா விழாவில் பங்கேற்க வந்திருக்கும் யானைகளை, தினமும் வனத்துறை அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கின்றனர்.
மைசூரு தசரா விழாவில் இந்தாண்டு 14 யானைகள் பங்கேற்கின்றன. இதில், முதல் கட்டமாக ஒன்பது யானைகள் அரண்மனைக்கு வந்துள்ளன.
ஜம்பு சவாரி ஊர்வலத்துக்காக, தினமும் காலை, மாலை நேரங்களில், அரண்மனை வளாகத்தில் இருந்து, பன்னிமண்டபம் வரை, 5 கி.மீ., துாரத்துக்கு, யானைகளுக்கு நடை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்படி, இரண்டு வேளைகளிலும் மொத்தம் தினமும் 20 கிலோ மீட்டர் துாரம் யானைகளுக்கு நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது, ஏதாவது இரும்புத் துண்டுகள், கம்பிகள், தகர பொடிகள், ஆணிகள், நட்டு, போல்டுகள், யானைகளின் பாதங்களில் ஏறிக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளன.
இதற்காக, முதன் முறையாக வனத்துறை சார்பில், நடைப் பயிற்சி முடிந்த பின், மெட்டல் டிடெக்டர் மூலம் யானைகளின் பாதங்களை சோதனை செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாதங்களில் ஏதாவது இரும்புத் துண்டுகள் குத்தியிருந்தால், அவை உடனடியாக அகற்றப்படுகின்றன.