கற்பாறைகள் குறுக்கிடுவதால் மெட்ரோ சுரங்க பணி தாமதம்
கற்பாறைகள் குறுக்கிடுவதால் மெட்ரோ சுரங்க பணி தாமதம்
ADDED : ஜூன் 15, 2024 04:14 AM
பெங்களூரு: காளேன அக்ரஹாரா - நாகவாரா இடையிலான பாதையில், கற்பாறைகள் தென்படுவதால் சுரங்கம் தோண்டும் பணிகள் தாமதமாகிறது.
பெங்களூரின், அக்ரஹாரா - நாகவாரா இடையே, 21 கி.மீ., தொலைவிலான மெட்ரோ, 'பிங்' பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் 13 கி.மீ., சுரங்கப்பாதையாகும். இது பெங்களூரின் மிக நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும்.
கிட்டத்தட்ட ஒன்பது டி.பி.எம்., இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. 7 டி.பி.எம்., இயந்திரங்கள், வெற்றிகரமாக சுரங்கத்தை தோண்டி முடித்து, வெளியே வந்தன. துங்கா மற்றும் பத்ரா இயந்திரங்கள் நடப்பாண்டு ஆகஸ்டில், சுரங்கம் தோண்டி முடித்து வெளியே வந்திருக்க வேண்டும். ஆனால் கற்பாறைகள் குறுக்கிடுவதால், பணிகள் தாமதமாகிறது. நடப்பாண்டு இறுதியில் பணிகள் முடியலாம் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
துங்கா 45 சதவீதமும், பத்ரா 22 சதவீதமும் சுரங்கம் தோண்டும் பணிகளை முடித்துள்ளன. இவ்விரண்டு இயந்திரங்கள் தினமும் 5 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டும் திறன் கொண்டுள்ளன. கற்பாறைகள் வருவதால் 3 மீட்டர் தொலைவு மட்டுமே, சுரங்கம் தோண்டுகின்றன.
பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரி யஷ்வந்த் சவ்ஹான் கூறியதாவது:
காளேன அக்ரஹாரா - நாகவாரா இடையிலான, மெட்ரோ பாதையில் 18 மெட்ரோ நிலையங்கள் வரும். இவற்றில் 12 சுரங்க மெட்ரோ நிலையங்களாகும்.
கற்பாறைகள் இடையூறாக இருப்பதால், சுரங்கம் தோண்டும் பணிகள் இரண்டு மூன்று மாதங்கள் தாமதமாகும். ஆகஸ்டுக்கு பதிலாக, நடப்பாண்டு இறுதியில் இரண்டு டி.பி.எம்.,கள் சுரங்கம் தோண்டும் பணியை முடிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

