ADDED : மார் 06, 2025 10:56 PM

வசந்த்குஞ்ச்:'கோல்டன்' வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதில் முக்கியமான மைல்கல் நேற்று டில்லி மெட்ரோ நிர்வாகம் எட்டியது.
டில்லியில் தற்போது 12 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 395 கி.மீ., தொலைவை 289 ரயில் நிலையங்கள் இணைக்கின்றன. தினமும் பல லட்சம் பயணியர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
மொத்தம் 33,348 கோடி மதிப்பீட்டில் நான்காம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 85.9 கி.மீ., நீளத்திற்கு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் ஏரோ சிட்டி மற்றும் துக்ளகாபாத் இடையே 23.622 கி.மீ., நீளத்திற்கு 'கோல்டன்' வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. 19.343 கி.மீ., சுரங்கப்பாதையிலும் 4.279 கி.மீ., நிலத்திற்கு மேலேயும் இந்த வழித்தடம் அமைகிறது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான துளையிடும் பணி நேற்று வசந்த்குஞ்ச் பகுதியில் நிறைவுபெற்றது.
கிஷன்கரில் இருந்து 1.55 கி.மீ., நீளத்திற்கு இந்த சுரங்கப்பாதை பாதை துளையிடும் பணி நடைபெற்று வந்தது. வசந்த் குஞ்ச் மெட்ரோ நிலைய தளத்தில் நேற்று துளையிடும் இயந்திரம் தன் பணியை நிறைவு செய்தது.
இந்த மைல்கல் முயற்சியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் டோகன் சாஹு ஆகியோர் பார்வையிட்டனர்.
இதே வழித்தடத்தில் மற்றொரு சுரங்கப்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் உலக சாதனை!
தற்போது 399 கி.மீ., வழித்தடத்துடன் நியூயார்க் மெட்ரோ மிகப்பெரிய சேவை வழக்குவதில் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை முறியடிக்க டில்லி மெட்ரோவுக்கு இன்னும் 5 கி.மீ., துாரம் மட்டுமே உள்ளது. விரைவில் உலகின் மிகப்பெரிய மெட்ரோ வழித்தடம் கொண்ட நகரமாக டில்லி சாதனை படைக்கும். வரும் டிசம்பருக்குள் கூடுதலாக 12 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுவிடும்.
மனோகர் லால் கட்டார்,
மத்திய நகர்ப்புறத் துறை அமைச்சர்