பால் விலை உயரும்: 'ஹின்ட்' கொடுத்த சித்து; ரூ.5 உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க சிபாரிசு
பால் விலை உயரும்: 'ஹின்ட்' கொடுத்த சித்து; ரூ.5 உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க சிபாரிசு
ADDED : செப் 14, 2024 11:38 PM

பெங்களூரு : 'கர்நாடகாவில் பால் விலை ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி, விவசாயிகளுக்கு வழங்கலாம்' என, முதல்வர் சித்தராமையாவுக்கு, கே.எம்.எப்., பரிந்துரை செய்துள்ளது. “இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யலாம்,” என, முதல்வரும் தெரிவித்துள்ளார்.
ராம்நகர் மாவட்டம், மாகடியில் வெவ்வேறு வளர்ச்சி பணிகளை முதல்வர் சித்தராமையா, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
அப்போது, கர்நாடகாவில் பால் விலை உயர்த்தி, அதை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். ஒவ்வொரு ஒரு லிட்டருக்கு 20 பைசா, கூட்டுறவு சங்க செயலருக்கு கவுரவ நிதி வழங்கலாம் என்று உறுதி அளித்தார்.
இதன் மூலம், கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில், விற்பனை செய்யப்படும் நந்தினி பால் விலை விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, துமகூரில் நேற்று கூறியதாவது:
பால் விலை ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் கோரப்பட்டுள்ளது. அந்த பணம், விவசாயிகளுக்கு நேரடியாக செல்லும்.
பால் விலை உயர்வால், மாநில அரசுக்கு ஒரு ரூபாய் கூட லாபம் கிடைக்காது. நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கர்நாடகாவில் 10 ரூபாய் குறைவான விலைக்கு தான், விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, விவசாயிகளிடம் இருந்து, ஒரு லிட்டர் பால் 31 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில், 56 - 58 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளின் நலன் கருதி, பால் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொருளாதாரம் மேம்படும்.
அதிக பணப்பரிமாற்றம் நடக்கும். பால் விலை உயர்வு குறித்து, பெங்களூரில் விரைவில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.