ஆந்திராவுக்கு கடத்தப்படும் கிரானைட் கற்கள் கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
ஆந்திராவுக்கு கடத்தப்படும் கிரானைட் கற்கள் கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
ADDED : ஆக 23, 2024 06:09 AM

தங்கவயல்: அரசு நிலங்களில் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி, விலை மதிப்புள்ள கிரானைட் கற்களை, ஆந்திராவுக்கு கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோலார் மாவட்டம், ஆந்திராவை ஒட்டி உள்ளது. தங்கவயலின் சொக்கரபன்டே பகுதியின் அரசு நிலத்தில், அதிக விலை மதிப்புள்ள வெள்ளை நிற கிரானைட் கற்கள் ஏராளமாக கிடைக்கின்றன.
இங்கு பலரும் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துகின்றனர். இங்கு அதிக வீரியம் கொண்ட வெடி மருந்துகள் பயன்படுத்தி, பாறைகளை தகர்ப்பதால் சுற்றுப்பகுதி கிராமங்களின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிராமங்களில் பீதி
பாறைகளை தகர்க்க டைனமைட்டுகள் பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நிபுணர்களால் வெடிக்க வைக்க வேண்டும். ஆனால் இங்கு, கூலி தொழிலாளர்கள் மூலமாகவே, வெடி பொருட்கள் வைத்து பணிகள் நடக்கின்றன. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அபாயம் ஏற்படும் என, அஞ்சுகின்றனர்.
சட்டவிரோத கல்குவாரி நடத்துவோர், விலை மதிப்புள்ள வெள்ளை நிற கிரானைட் கற்களை, ஆந்திராவுக்கு கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கிராமத்தினர் கூறியதாவது:
சொக்கரபன்டே பகுதியில் நடக்கும் சட்டவிரோத கல்குவாரி தொழிலில், சில அதிகாரிகள், செல்வாக்கு மிக்க முக்கிய புள்ளிகளுக்கு தொடர்புள்ளது. இது பற்றி பேசவே, எங்களுக்கு அச்சமாக உள்ளது.
தமிழக லாரிகள்
பாறைகளை தகர்க்க, அபாயகரமான வெடி பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால், சிறார்கள், கால்நடைகளுக்கு அபாயம் ஏற்படலாம். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கிரானைட் உட்பட, மற்ற கற்களை கொண்டு செல்ல, தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை மரம், செடி கொடிகள், புதர்களில் மறைவாக நிறுத்துகின்றனர். இரவு நேரத்தில் கற்களை நிரப்பி கடத்துகின்றனர்.
கனரக லாரிகள் பயன்படுத்துவதால், கிராமப்புறங்களில் ரோடுகள் பாழாகின்றன. சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பது தெரிந்தும், இதை தடுக்க சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள் முயற்சிக்கவில்லை. சட்டவிரோத செயல்களுக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராமத்தில் அரசு நிலத்தில், சட்டவிரோதமாக சுரங்கத்தொழில் நடப்பதாக புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று பார்த்த போது, அரசு நிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கத்தொழில் நடப்பது தெரிந்தது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
- கே.நாகவேணி,
தாசில்தார், தங்கவயல்