கெஜ்ரிவால் கைது ஆம் ஆத்மிக்கு லாபம் அமைச்சர் அதிஷி கருத்து
கெஜ்ரிவால் கைது ஆம் ஆத்மிக்கு லாபம் அமைச்சர் அதிஷி கருத்து
ADDED : மார் 28, 2024 12:30 AM
புதுடில்லி:“முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, ஆம் ஆத்மி கட்சிக்கு லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை வாங்கித் தரும்,”என, டில்லி அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
டில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி சிங் நேற்று கூறியதாவது:
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பது, ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் லாபம்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பதால், டில்லி மக்கள் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றனர். இது, லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை வாங்கித் தரும்.
டில்லியைப் பொறுத்த வரை லோக்சபா தேர்தலி டில்லி மக்கள் மற்றும் பா.ஜ., இடையேயான போட்டியாக மாறியுள்ளது.டில்லி அரசு சிறையில் இருந்து செயல்படக்கூடாது என, துணைநிலை கவர்னர் சக்சேனா தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிரூபிக்கப்படவில்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பதவி வகிக்கிறார்.
அரசியலமைப்பு சட்டம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதிமுறைப்படி பெரும்பாண்மை பெற்றுள்ள ஆட்சியைக் கலைக்க முடியும்.
வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும் என உச்சநீதிமன்றம் கூட கூறியுள்ளது.
அதையும் மீறி, டில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தினால் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பது மிகத் தெளிவாக மக்களுக்குப் புரிந்து விடும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறைக்கு, எந்த ஆதாரமும் தேவையில்லை. அவர்கள் கைது செய்தால் ஜாமின் கிடைக்காது. எனவேதான், எதிர்க்கட்சியினரை பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.