'ஏர் இந்தியாவின் ஏமாற்று வேலை' உடைந்த சீட்டால் அமைச்சர் கோபம்
'ஏர் இந்தியாவின் ஏமாற்று வேலை' உடைந்த சீட்டால் அமைச்சர் கோபம்
ADDED : பிப் 22, 2025 11:36 PM

புதுடில்லி: போபால் - டில்லி விமானத்தில் தனக்கு உடைந்த சீட் ஒதுக்கப்பட்டதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் புகார் கூறியுள்ளார்.
'இது பயணியரை ஏமாற்றும் வேலை' என, அவர் கோபத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மத்திய வேளாண் அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், நேற்று காலை மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து டில்லிக்கு, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
எனக்கு ஒதுக்கப்பட்ட சீட் உடைந்திருந்தது. இதுகுறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தேன்.
விமானத்தில் பயணித்த சிலர், அவர்களுடைய சீட்டை எனக்கு தருவதாகக் கூறினர். அதை ஏற்கவில்லை; உடைந்த சீட்டிலேயே அமர்ந்து, ஒன்றரை மணி நேரம் பயணம் செய்தேன்.
இதனால் எனக்கு அசவுகரியம் ஏற்பட்டதற்காக வருத்தப்படவில்லை. அதே நேரத்தில் முழு கட்டணத்தை வசூலித்து, உடைந்த சீட் அளிப்பது பயணியரை ஏமாற்றும் வேலை.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், உடனடியாக இந்தப் பிரச்னையை கவனிப்பதாகவும் கூறப்பட்டுஉள்ளது.

