குமாரசாமிக்கு முழு ஒத்துழைப்பு அமைச்சர் செலுவராயசாமி உறுதி
குமாரசாமிக்கு முழு ஒத்துழைப்பு அமைச்சர் செலுவராயசாமி உறுதி
ADDED : ஜூன் 20, 2024 05:58 AM

மாண்டியா; ''மாண்டியாவில் வளர் ச்சி பணிகளை மேற்கொள்ளும் விஷயத்தில், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்,'' என்று, கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராய சாமி கூறியுள்ளார்.
மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., அணையில், விவசாய அமைச்சர் செலுவராயசாமி நேற்று ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்னை கிடப்பில் உள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு தெரிந்த தகவலை, மாண்டியா எம்.பி., குமாரசாமிக்கு கொடுப்பேன். காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தால், கர்நாடகா அரசு உடனடியாக டென்டருக்கு அழைப்பு விடுக்கும்.மாண்டியா மைசுகர் தொழிற்சாலைக்கு, மத்திய அரசிடம் இருந்து, குமாரசாமி நிதி வாங்கி கொடுத்தால் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பேன்.
மாண்டியா மாவட்டம் வழியாக ஓடும் காவிரி ஆற்றில் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்காக 5,000 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கும்படி, மத்திய ஜல்சக்தி அமைச்சருக்கு கடிதம் எழுதுவேன்.
மாண்டியாவில் வளர்ச்சி பணிகள் செய்யும் விஷயத்தில், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். தேர்தல் முடிந்து விட்டது. இனி அரசியல், குற்றச்சாட்டுகள் தேவையில்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தால், கே.ஆர்.எஸ்., அணை நிரம்பிவிடும். அதன்பின்னர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்போம்.
எங்கள் அரசு செய்யும் தரமான பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர்களால்சகித்துக் கொள்ள முடியவில்லை. துணை முதல்வர் சிவகுமார், சென்ன பட்டண இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்பது வதந்தி.அவரது தம்பி சுரேஷ் போட்டியிட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து முதல்வரும், கட்சி மேலிடமும் தான் முடிவு எடுக்க வேண்டும். கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷனை விடுவிக்கும்படி, எந்த அமைச்சரும் அழுத்தம் கொடுக்கவில்லை. முதல்வரும், அழுத்தத்திற்கு அடிபணிய கூடிய நபரும் இல்லை. பாரபட்சமற்ற விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை வைத்து அரசியல் செய்வது தேவையா.
அரசு திவால் ஆகிவிட்டது என்று எதிர்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார். அரசு திவால் ஆகிவிட்டது என்றால், அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதா. பொது மக்களுக்கான சேவை நின்று போனதா.
சித்தராமையாவை போன்று, நல்லாட்சி கொடுக்கும் முதல்வர் வேறு யாரும் இல்லை. அசோக்கிற்கு போதுமான தகவல் யாரும் கொடுப்பதில்லை. அவருக்கு கொஞ்சம் அறிவு குறைவு.
இவ்வாறு அவர்கூறினார்.