இடுக்கியில் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும்: அமைச்சர் தகவல்
இடுக்கியில் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும்: அமைச்சர் தகவல்
ADDED : ஆக 13, 2024 11:33 PM

மூணாறு : மூணாறில் லெட்சுமி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இடுக்கி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கமம் நடந்தது. அதில் பங்கேற்ற கேரள பால் வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சிஞ்சுராணி, லெட்சுமி எஸ்டேட்டில் அமைக்கப்பட்ட 'பாலாலயம்' திட்டம், முதன் முதலாக கூட்டுறவு சங்கம் சார்பிலான பால் ஏ.டி.எம். ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.அதன் பிறகு நடந்த கூட்டத்திற்கு தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா தலைமை வகித்தார்.
அமைச்சர் சிஞ்சுராணி, எம்.எல்.ஏ.க்கள் மணி, வாழூர்சோமன், கூட்டுறவு சங்க தலைவர் குருசாமி, செயலர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
இடுக்கி மாவட்டம் பால் உற்பத்தியில் மாநில அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தினமும் 1.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
அதனை 2 லட்சம் லிட்டர் உயர்த்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் கால்நடை தீவனம் 50 சதவிகிதம் மட்டும் கிடைக்கிறது.
வெளி மாநிலங்களில் இருந்து 50 சதவிகிதம் தீவனம் வருகின்றன. அவை தரம் இன்றி உள்ளதால் பசுக்கள் இறக்க நேரிடுகின்றன. அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். வன விலங்குகளிடம் சிக்கி பலியாகும் இன்சூரன்ஸ் இல்லாத பசுக்களுக்கு இறக்க நேரிடும் பசுக்களுக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது, என்றார்.