பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட்டுடன் அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட்டுடன் அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
ADDED : மார் 04, 2025 12:07 AM

புதுடில்லி: ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட் அரசு முறை சுற்றுப் பயணமாக வந்துள்ளார். அவருடன் உயர்நிலை பொருளாதாரக் குழுவினரும் வந்துள்ளனர். இதில், 360 தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இருதரப்பு துாதரக உறவுகளைத் தவிர, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது, நம் நாட்டில் முதலீடுகள் செய்வது, பல துறைகளில் இணைந்து செயல்படுவது போன்றவை குறித்து இந்த பயணத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட், பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான மேக்சிம் பிரிவாட் உடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது:
இந்தியா, பெல்ஜியம் இடையேயான உறவு சீராக வளர்ந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், ஐரோப்பிய நாடுகளிலேயே பெல்ஜியத்தில் தான் இந்தியாவின் முதல் துாதரகம் அமைந்தது. நம் நாடுகளுக்கு இடையே வரலாற்று தொடர்பு உள்ளது.
செமி கண்டக்டர், பசுமை எரிசக்தி, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.