துங்கபத்ரா ஷட்டர் சீரமைப்பு பணிகள் பூஜையுடன் துவக்கிய அமைச்சர் ஜமீர்
துங்கபத்ரா ஷட்டர் சீரமைப்பு பணிகள் பூஜையுடன் துவக்கிய அமைச்சர் ஜமீர்
ADDED : ஆக 15, 2024 03:56 AM

பெங்களூரு, : துங்கபத்ரா அணைக்கு புதிதாக மதகு ஷட்டர் பொருத்தும் பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், நேற்று பூஜைகள் செய்து துவக்கி வைத்தார்.
கொப்பால், கங்காவதியின் முனிராபாத் அருகில் துங்கபத்ரா அணை உள்ளது. சில நாட்களுக்கு முன், அணையின் 19வது மதகின் ஷட்டர் உடைந்து, நீரில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் 21 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறி உள்ளது. அணையை சரியாக பராமரிக்கவில்லை என, விவசாயிகளும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர். மதகின் ஷட்டரை பழுது பார்க்கும்படி வலியுறுத்தினர்.
பொறியியல் வல்லுனர்கள், மூன்று நாட்களாக அணைப் பகுதியில் முகாமிட்டு. சூழ்நிலையை கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், மதகுக்கு புதிதாக ஷட்டர் பொருத்தும் பணிகளை, வீட்டுவசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் நேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அர்ச்சகர்கள் வந்து, சாஸ்திர, சம்பிரதாய முறைப்படி பூஜைகள் நடத்தினர்.
பூஜையில் பங்கேற்ற அமைச்சர் ஜமீர் அகமது கான், தேங்காய் உடைத்து பணிகளை துவக்கி வைத்தார். அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
பணிகளுக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும், அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 'பணிகளை நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதகுக்கு புதிய ஷட்டர் பொருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ளன. பழுது பார்ப்பதால் அணையின் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக திறந்து விடப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த காரணத்தை முன்னிட்டும் யாரும் ஆற்றில் இறங்க கூடாது. சிறு குழந்தைகள், கால்நடைகள் ஆற்றங்கரைக்கு செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.