அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயர்வு; அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பெருமிதம்
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயர்வு; அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பெருமிதம்
ADDED : மார் 14, 2025 11:29 PM

பெங்களூரு : ''அங்கன்வாடி ஊழியர்கள் மீது, அரசுக்கு அக்கறை உள்ளது. எனவே, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி உள்ளோம்,'' என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மேல்சபையில் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு 750 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு ஆண்டுதோறும் 144 கோடி ரூபாய் பொருளாதார சுமை ஏற்படும்.
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியது காங்கிரஸ் அரசு தான். 2017ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, 2,000 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டது.
முந்தைய பா.ஜ., அரசு, நான்கு ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, ஒரு ரூபாய் கூட ஊதியத்தை உயர்த்தவில்லை.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. இதில் மாநில அரசின் பங்கு அதிகம்.
இவர்களின் ஊதியத்தை அதிகரிக்கும்படி, மத்திய அரசிடம் பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பொருட்படுத்தவில்லை.
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை அதிகரித்த மாநிலங்களில், நாட்டிலேயே கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. எங்களுக்கு இவர்கள் மீது அக்கறை உள்ளது.
எனவே ஊதியத்தை உயர்த்தினோம். இதன் மூலம் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் கூறியதை எங்கள் அரசு நிறைவேற்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.