அமைச்சர் லட்சுமி கார் விபத்து ஒரு மாதமாக சிக்காத லாரி
அமைச்சர் லட்சுமி கார் விபத்து ஒரு மாதமாக சிக்காத லாரி
ADDED : பிப் 22, 2025 05:24 AM

பெலகாவி: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கார், விபத்தில் சிக்கிய வழக்கில், விபத்துக்கு காரணமான லாரியை, ஒரு மாதத்துக்கும் மேலாக, கிட்டூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். கடந்த மாதம் 13ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு தனது சொந்த காரில் சென்றார். மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பெலகாவியின் கிட்டூர் அருகே, லட்சுமி பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
இதில் லட்சுமியின் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். தற்போது வீட்டில் அமர்ந்து தனது துறைக்கு உட்பட்ட பணிகளை கவனித்துவருகிறார்.
நாய் குறுக்கே வந்தததால் அதன் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது, கார் விபத்தில் சிக்கியது என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் காருக்கு முன்பு சென்ற லாரியை, டிரைவர் திடீரென வலதுபக்கத்தில் இருந்து இடதுபக்கம் திருப்பியதால் விபத்து நடந்தது என்று, லட்சுமியின் கார் டிரைவர் புகார் செய்தார். அதன்படி, வழக்குப் பதிவு செய்து, கிட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் அந்த லாரியை தேடும் பணியில், கிட்டூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பெலகாவி எஸ்.பி., பீமாசங்கர் குலேத் கூறுகையில், ''இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அமைச்சர் லட்சுமி கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வழக்கில், லாரி பஞ்சாப் அல்லது ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
''ஹிரேபாகேவாடி சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில், விபத்து நடந்த நேரத்திற்கு முன்பு சென்ற 60 லாரிகள் பற்றிய தகவலை பெற்று உள்ளோம். அதில் 30 லாரிகளில் ஆய்வு செய்துஉள்ளோம்,'' என்றார்.

