எஸ்.சி., நிதியை தவறாக பயன்படுத்தவில்லை அமைச்சர் மஹாதேவப்பா விளக்கம்
எஸ்.சி., நிதியை தவறாக பயன்படுத்தவில்லை அமைச்சர் மஹாதேவப்பா விளக்கம்
ADDED : ஜூலை 20, 2024 06:40 AM

பெங்களூரு: ''எஸ்.சி., --- எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணம், வாக்குறுதி திட்டங்களுக்கு பயன் படுத்தினாலும், அதே சமுதாய பயனாளிகளுக்கு கிடைக்கிறது. எனவே, பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை,'' என சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.
கர்நாடக மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
காங்., - சுதாமதாஸ்:எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சர் மஹாதேவப்பா: எந்த காரணத்தை கொண்டும், இந்த பிரிவினரின் பணத்தை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த சட்டத்தில் இடம் இல்லை. ஒரு வேளை வாக்குறுதி திட்டங்களுக்கு, பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும், இந்த பணம் எஸ்.சி., - எஸ்.டி., சமுதாய பயனாளிகளுக்கே கிடைக்கிறது.
நாட்டிலேயே முதன் முறையாக, நமது மாநிலத்தில், எஸ்.சி., - எஸ்.டி., துணை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆந்திரா, தெலுங்கானாவில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே சமுதாயத்தினருக்கு பணம் செல்வதால், தவறாக பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. முந்தைய பா.ஜ., அரசு 8,000 கோடி ரூபாயை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது.
மாநிலத்தில் 24 சதவீதம் எஸ்.சி., - எஸ்.சி., சமுதாயத்தினர் உள்ளனர். தேசிய மக்கள் தொகை அடிப்படையில், அந்தந்த சமுதாயத்தினருக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
பா.ஜ., - சலவாதி நாராயணசாமி: எஸ்.சி., - எஸ்.டி. பிரிவினருக்கு சொந்தமான பணத்தை, வாக்குறுதிதிட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர். செக்ஷன் 7டி விதிமுறையை அரசு நீக்கவில்லை. எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தினீர்கள்.
பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் போது, ஜாதியை கேட்டறிந்து டிக்கெட் தருகிறீர்களா. அன்னபாக்யா திட்டத்தின் கீழ், ஜாதியை பார்த்து அரிசி வழங்குகிறீர்களா.
அமைச்சர் மஹாதேவப்பா: இதற்கு முன், சித்தராமையா அரசு இருந்த போது, எஸ்.சி., - எஸ்.டி., துணை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்த பிரிவினருக்கு எந்த வகையில் பணத்தை பயன்படுத்துவது என்பது, 7ஏ, 7பி, 7சி, 7டி என பிரிக்கப்பட்டது. 7டி பிரிவை நேற்றைய (நேற்று முன்தினம்) அமைச்சரவை கூட்டத்தில் நீக்கினோம்.
வேறு நோக்கங்களுக்கு, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. அதே சமுதாயத்தினருக்கு பயன்படுத்தப்படும்.
சலவாதி நாராயணசாமி: நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே, 11,000 கோடி ரூபாயை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தினீர்கள். இந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 35 சதவீதத்தை, வேறு நோக்கத்துக்கு பயன் படுத்தியுள்ளீர்கள். இந்த பணத்தை திரும்ப பெறுங்கள். இல்லாவிட்டால் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும்.
அம்பேத்கரின் ரத்தம், மஹாதேவப்பா கையில் ஓடுகிறது. நமது கண்ணை நாமே குத்தி கொண்டது போன்றதாகும். வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை, உடனடியாக திரும்ப பெறுங்கள்.
அமைச்சர் பிரியங்க் கார்கே: எஸ்.சி., பிரிவினரின் பணத்தை நாங்கள் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தவில்லை. சட்டத்தில் என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ, அதன்படியே எங்கள் அரசு நடந்து கொள்கிறது. எனவே சட்டத்தை மீறியது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
பா.ஜ., - சாந்தராம் சித்தி: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் திட்டம், பயனாளிகளை சென்றடைந்ததாக கூறுகிறீர்கள். ஆனால் உண்மையில் எங்கள் பகுதிகளுக்கு திட்டம் வரவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.