ராஜ்நாத்சிங், நிர்மலா, குமாரசாமியுடன் அமைச்சர் எம்.பி.பாட்டீல் சந்திப்பு
ராஜ்நாத்சிங், நிர்மலா, குமாரசாமியுடன் அமைச்சர் எம்.பி.பாட்டீல் சந்திப்பு
ADDED : செப் 10, 2024 11:44 PM

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், குமாரசாமி ஆகியோருடன், கர்நாடக கனரக தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், டில்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக காங்கிரசில், முதல்வர் பதவி குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், நேற்று முன்தினம் திடீரென டில்லி சென்றார்.
டில்லியில், நேற்று ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் உள்ள கடற்படை தளத்தின் விமான ஓடு தளத்தை, 2 கி.மீ., துாரத்தில் இருந்து, 2.7 கி.மீ., துாரமாக விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில், புதிதாக தொழில் துவங்குவோருக்கு உதவுவதற்காக, 10,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கும்படி கோரினார்.
மேலும், தொழில் துறைக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு கோப்புகள் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் பெற்று தரும்படியும் கேட்டு கொண்டார்.
இதன் பின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, விரைவில் அழுக கூடிய உணவு பொருட்களை, விமானத்தில் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.,யை குறைக்கும்படி வலியுறுத்தினார்.
இதே வேளையில், மின்சார வாகனங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி.,யையும்; சுங்க கட்டணத்தையும் ரத்து செய்யும்படியும் கோரினார்.
இதற்கிடையில், சிங்கப்பூர் துாதர் சைமன் வாங்குடன் ஆலோசனை நடத்தி, அடுத்தாண்டு பெங்களூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த வெவ்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.
- நமது நிருபர் -