ADDED : ஜூன் 24, 2024 05:02 AM

பெங்களூரு : கர்நாடக தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், ஜப்பான், தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.
கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பத்து நாட்கள் ஜப்பான், தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். இவருடன் தொழிற்துறை முதன்மை செயலர் செல்வகுமார், வர்த்தகம், தொழிற்துறை கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உட்பட, பல உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இரண்டு நாடுகளின் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து, கர்நாடகாவில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுப்பர். மாநிலத்தின் தொழில் நிறுவனங்களுக்கு உள்ள சாதகமான சூழ்நிலை, சிறந்த கொள்கை அமலில் இருப்பதை விவரிப்பர். இங்கு தொழில் துவங்கினால் தேவையான அனைத்து வசதிகளையும், அரசு செய்து தருவதாக உறுதி அளிப்பர்.
இரு நாடுகளின், 27க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவர். அமைச்சர் தலைமையிலான குழுவினர், டோக்கியோ மற்றும் சியோல் நகரங்களில், 'ரோடு ஷோ' நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.