பிரதமர் பதவி வாய்ப்பை நிராகரித்தேன் அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவல்
பிரதமர் பதவி வாய்ப்பை நிராகரித்தேன் அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவல்
ADDED : செப் 15, 2024 11:52 PM

புதுடில்லி: “பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்கினால் ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ஆனால், அது போன்ற எண்ணம் இல்லை என்று நிராகரித்து விட்டேன்,” என, பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
ஊடகம் மற்றும் அரசியலில் ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். நீதித் துறை, அரசு நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்பு மற்றும் ஊடகம் ஆகிய நான்கு துாண்களும் ஒழுக்க நெறிகளை முறையாக பின்பற்றினால்தான், ஜனநாயகம் வலுவாக இருக்க முடியும்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர் முன்பு என்னை சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்கினால், எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீங்கள் ஏன் ஆதரவு தர வேண்டும். நான் ஏன் உங்களுடைய ஆதரவைப் பெற வேண்டும் என்று கேட்டேன்.
எனக்கு அதுபோன்ற ஒரு எண்ணமும் இல்லை; நோக்கமும் இல்லை என்றேன். பிரதமராக வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்து பார்த்ததில்லை. நான் என் மனசாட்சி மற்றும் அமைப்புக்கு எப்போதும் நேர்மையானவனாக இருப்பேன்.
இதுபோன்ற பதவிகளைவிட, என் கொள்கைகளில் சமரசம் செய்யக்கூடாது என்பதை ஒரு ஒழுக்க நெறிமுறையாக தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.
அந்தத் தலைவருடன் நடந்த பேச்சின்போது, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் குறித்தும் பேசினோம். அவரும் நாக்பூர் மற்றும் விதர்பா பகுதியைச் சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதி என்றேன்.
ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிரான கொள்கை உடைய பரதனை எப்படி பாராட்டுகிறீர்கள் என்று அந்த மூத்தத் தலைவர் என்னிடம் கேட்டார். அரசியலில் தன் கொள்கைக்காக, மிகவும் நேர்மையான முறையான முறையில் எதிர்ப்பை தெரிவித்து வந்தவர் பரதன்.
அதனால் அவரை எனக்கு பிடிக்கும். எதிர்ப்பு தெரிவிப்பதில் நேர்மையற்ற முறையில் உள்ளவர்கள் மரியாதையை இழப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால், எந்த காலகட்டத்தில் இந்த சந்திப்பும், பேச்சும் நடந்தது என்பதை நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.
நாற்காலி ஆசை!
'இண்டி' கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியான பல தலைவர்கள் இருக்கும்போது, நிதின் கட்கரிக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், பிரதமர் நாற்காலி மீது தனக்கு ஆசை இருப்பதை நிதின் கட்கரி சாமர்த்தியமாக வெளிப்படுத்தி விட்டார்.
பிரியங்கா சதுர்வேதி
எம்.பி., சிவசேனா உத்தவ் பிரிவு