டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கலெக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவு
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கலெக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : ஜூலை 05, 2024 06:24 AM

பெங்களூரு: கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலுடன், ஜிகா வைரசும் பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதார துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதார அதிகாரிகளுடன், அமைச்சர் தினேஷ் குண்டுராவ், காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
டெங்கு பாதிப்பு உள்ள இடங்களில், காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் டெங்கு பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு பாதிப்பு ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். தாமதம் ஏற்படும் போது, மரணம் நிகழ்கிறது. டெங்குவால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது. உயிரிழப்புகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆஷா பணியாளர்கள், வீடு தோறும் சென்று ஆய்வு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மருத்துவ அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று அறிவியல் ஆசிரியர்கள் மூலம், டெங்கு காய்ச்சல் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
கொசுக்களை உருவாக்கும் 'லார்வா'க்களை அழிக்க உள்ளாட்சி அமைப்பு தலைமை நிர்வாக அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கல்வித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும், வாரத்தில் ஒரு நாள் களப்பணியாற்ற வேண்டும். அதுபோன்று ஜிகா வைரஸ், அண்டை மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இதுவும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
5_DMR_0011
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இடம்: பெங்களூரு.