மனநல காப்பகத்தில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
மனநல காப்பகத்தில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : ஆக 02, 2024 10:29 PM
புதுடில்லி:மனநலக் காப்பகத்தில் 14 பேர் மரணம் குறித்து விசாரணை நடத்தி 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வடமேற்கு டில்லி ரோஹிணி 'ஆஷா கிரண் மனநலக் காப்பகம் அமைந்துள்ளது. டில்லி அரசு நடத்தும் இந்தக் காப்பகத்தில் கடந்த 20 நாட்களில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, அமைச்சர் அதிஷி கூறியதாவது:
அரசு மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட இந்த மரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தவறுகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி காப்பகத்தின் குறைபாடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆஷா கிரண் காப்பகத்தில் முழு விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் தங்கியிருப்போருக்கு சிறப்பான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் காப்பகம் டில்லி அரசின் சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் 2 மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சமூகநலத் துறைக்கு அமைச்சரும் நியமிக்கப்படவில்லை. வேறு அமைச்சரிடமும் அந்தத் துறைப் பொறுப்பை ஒப்படைக்கவில்லை.