சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,வை பாராட்டிய அமைச்சர் பரமேஸ்வர்
சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,வை பாராட்டிய அமைச்சர் பரமேஸ்வர்
ADDED : மார் 14, 2025 11:35 PM

ராம்நகர்: அரசியலில் எதிர்காலத் தலைவராக வருவார் என, சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பாராட்டி உள்ளார்.
ராம்நகரின் மாகடி ஹெப்பலாலு கிராமத்தில் உள்ள முல்கட்டம்மா கோவிலில் நேற்று முன்தினம் இரவு ரத உத்சவம் நடந்தது.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அவரது மனைவி கன்னிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பரமேஸ்வர் பேசியதாவது:
மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ஐந்தாவது முறை வெற்றி பெற்றுள்ளார். அரசியலில் எதிர்கால தலைவராக வருவார். நான் சொல்லவில்லை. முல்கட்டம்மா, என் மூலம் கூறுகிறார்.
துமகூரு சித்தகங்கா மடத்தில் வைத்து, விஜயேந்திரா எதிர்காலத் தலைவராக இருப்பார் என்று கூறினேன். இப்போது அவர் பா.ஜ., தலைவராக உள்ளார். இன்னும் அரசியலில் முன்னுக்குச் செல்வார்.
விஜயேந்திராவை போன்று பாலகிருஷ்ணாவுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. ஹேமாவதி நீரை மாகடிக்கு திறந்து விட வேண்டும் என்ற, மக்கள் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்துள்ளது.
தண்ணீருக்காக யாரும் போராட வேண்டிய அவசியம் இல்லை. ஹேமாவதி அனைவருக்குமான திட்டமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலகிருஷ்ணா, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர். சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அடிக்கடி கூறுகிறார். பரமேஸ்வருக்கும், சிவகுமாருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இந்நிலையில் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,வை, பரமேஸ்வர் பாராட்டி இருப்பது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.