யமுனையில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றம்: அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
யமுனையில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றம்: அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
UPDATED : மார் 06, 2025 03:57 AM
ADDED : மார் 06, 2025 01:12 AM

புதுடில்லி: “யமுனை நதியில் இருந்து 10 நாட்களில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது,” என, டில்லி நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.
யமுனை நதியில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. அமைச்சர் பர்வேஷ் வர்மா யமுனை நதியில் படகில் சென்று, குப்பை அகற்றும் பணியை நேற்று ஆய்வு செய்தார்.
திறன் அதிகரிப்பு
யமுனை நதி மற்றும் கரைப் பகுதியில் செய்ய வேண்டிய துாய்மைப் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் நிருபர்களிடம் வர்மா கூறியதாவது:
டில்லி மாநகர் முழுதும் அனைத்து வடிகால்களும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனை நதியில் கலப்பதைத் தடுக்க அவற்றின் திறன் அதிகரிக்கப்படும்.
சட்டசபைத் தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வதாக பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது. அதன்படி, ஆட்சி அமைத்தவுடனேயே யமுனையில் குப்பை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டது.
கடந்த 10 நாட்களில் யமுனையில் இருந்து 13 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது.
வெள்ளம்
கடந்த 2023ம் ஆண்டு வெள்ளத்தால் டில்லி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளத் தடுப்புக் கதவுகள் சீரமைக்கப்பட்டு, உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யமுனையை மீட்டெடுக்கும் பணியில் டில்லி அரசு மட்டுமின்றி, பிரதமரும் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.