கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்
கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்
ADDED : செப் 10, 2024 06:42 AM

கலபுரகி: ''கலபுரகியில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், மக்கள் நலன், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என ஐ.டி., - -பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், முதன் முறையாக வரும் 17ம் தேதி, கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
இது குறித்து, ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகியில் நேற்று கூறியதாவது:
வழக்கமாக அமைச்சரவை கூட்டத்தில், ஒட்டு மொத்த மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்படும். பல ஆண்டுகள் கழித்து, தற்போது கலபுரகியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், கல்யாண கர்நாடக பகுதி மக்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மக்கள் நலன், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தலாம் என்று தீர்மானம் செய்யப்படும்.
நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) தலைமை செயலருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.