சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் அலறல்
சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் அலறல்
ADDED : ஜூன் 09, 2024 02:59 AM

பெங்களூரு ; ''வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பான சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் தயார்,'' என, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ்பாட்டீல் சவால் விடுத்தார்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றிய அதிகாரி சந்திரசேகர், 52. இவர் மே 27ல், ஷிவமொகாவில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, இவர் எழுதிய கடிதத்தில், 'ஆணையத்தின் நிதியை, சட்டவிரோதமாக வேறு கணக்குக்கு பரிமாற்றம் செய்ய, எனக்கு நெருக்கடி கொடுத்தனர்' என, விவரித்திருந்தார்.
இது தொடர்பாக, விசாரணை நடத்த, மாநில அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். வால்மீகி மேம்பாட்டு ஆணையம், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 'துறை அமைச்சர் நாகேந்திராவுக்கும் தொடர்பிருக்கலாம். அவர் பதவி விலக வேண்டும்' என, பா.ஜ.,வினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
சூழ்நிலை மோசமாவதை பார்த்து, உஷாரான முதல்வர் சித்தராமையா, தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்க்க, அமைச்சர் நாகேந்திராவிடம் ராஜினாமா கடிதம் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழலை மூடி மறைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. சாட்சிகளை கலைக்கும் நோக்கில், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ்பாட்டீல், பெங்களூரின் விகாஸ்சவுதாவில் தன் அறையில், மே 24ல் மருத்துவ வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதை அமைச்சர் மறுத்துள்ளார்.
கேலிக்கூத்து
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
விகாஸ் சவுதாவில், என் அலுவலகத்தில், வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவர் பசவராஜ் தத்தல் உட்பட, சிலருடன் கூட்டம் நடத்தி சாட்சிகளை கலைக்க, நான் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
உண்மையில் மே 24ல், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நான் அலுவலகத்துக்கு செல்லவில்லை.
இச்சூழ்நிலையில், நான் அலுவலகத்தில் இருந்ததாக கூறப்படுவது நகைப்புக்குரியது. இதுகுறித்து எந்த விசாரணைக்கும், நான் தயாராக இருக்கிறேன்.
நேர்மையான முறையில் பணியாற்றிய திருப்தி எனக்குள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து, நான் கவலைப்படவில்லை. விகாஸ் சவுதா அலுவலகம், எனக்கு அரசு கொடுத்தது. அது என் சொந்த வீடு அல்ல.
நான் அமைச்சர் என்பதால், என்னை பார்க்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். அனைவரின் விபரங்களை சேகரிக்க முடியுமா?
எஸ்.ஐ.டி., வசத்தில் உள்ள நபரின் முகத்தை, நான் பார்த்ததே இல்லை. அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விசாரணை அதிகாரிகளிடம் அவர் என்ன கூறினார் என்பதும், எனக்கு தெரியாது. மருத்துவ கல்வித்துறை அமைச்சர் என, கூறியுள்ளாரா? வெறும் ஊகங்களுக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்.
சம்பந்தமில்லை
கைதான குற்றவாளிகள், என்ன தகவல்களை கூறினர் என்பது, எனக்கும் தெரியாது; அரசுக்கும் தெரியாது. கட்டுக்கதைகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்லை. வழக்குக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை.
என் அலுவலகத்தில், நான் கூட்டம் நடத்தியிருந்தால், கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்யட்டும். இது பற்றி அரசு விசாரணை நடத்தினாலும், எனக்கு ஆட்சேபனை இல்லை. விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
யார் தவறு செய்தாலும், சட்டப்படி தண்டனை கிடைக்கும். இதற்கு முன்பு நான் அமைச்சராக இருந்தபோதும், அரசு மற்றும் கட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும் வகையில் பணியாற்றினேன்.
எந்த அடிப்படையில், என்னிடம் பா.ஜ.,வினர் ராஜினாமா கடிதம் கேட்கின்றனர் என்பது தெரியவில்லை.
வழக்குக்கும், எனக்கும் தொடர்பு இல்லாத போது, நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.