பா.ஜ., தொகுதிகள் புறக்கணிப்பு விசாரணை நடத்த அமைச்சர் உறுதி
பா.ஜ., தொகுதிகள் புறக்கணிப்பு விசாரணை நடத்த அமைச்சர் உறுதி
ADDED : பிப் 27, 2025 10:24 PM
“முந்தைய ஆட்சியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் எட்டு தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாமல் புறக்கணிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும்,” என, சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா உறுதி அளித்தார்.
முந்தைய ஆட்சியில் பா.ஜ.,வின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது குறித்து, சட்டசபையில் பா.ஜ.,வின் விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ., ஓ.பி.சர்மா கேள்வி எழுப்பினார்.
ஓ.பி.சர்மா: முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின்போது, என் தொகுதியில் ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் இந்த விவகாரம் குறித்து மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.
முந்தைய சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.,வின் வேறு சில எம்.எல்.ஏ.,க்களும் இதே விஷயத்தை எழுப்பி, அப்போதைய ஆம் ஆத்மி அரசாங்கத்தால் மாற்றாந்தாயாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
லட்சுமி நகர் எம்.எல்.ஏ., அபய் வர்மா: பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற உத்தரவு மற்றும் தலைமைச் செயலரின் பரிந்துரை இருந்தபோதிலும், எதுவும் நடக்கவில்லை.
சபாநாயகர் விஜேந்தர் குப்தா: 70 தொகுதிகளிலும் தலா 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஆனால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் எட்டு தொகுதிகள் முந்தைய அரசாங்கத்தால் கைவிடப்பட்டன. அனைத்து தொகுதிகளிலும் நிறுவ 1.40 லட்சம் கேமராக்களை முந்தைய ஆம் ஆத்மி அரசு வாங்கியது.
எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறுகையில், “இந்த விவகாரம் விசாரிக்கப்படும். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். எட்டு தொகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்,” என்றார்.
- நமது நிருபர் -