முதல்வர் மீது அமைச்சர்கள் அதிருப்தி ராகுலிடம் புகார் அளிக்க முடிவு
முதல்வர் மீது அமைச்சர்கள் அதிருப்தி ராகுலிடம் புகார் அளிக்க முடிவு
ADDED : செப் 05, 2024 03:50 AM
பெங்களூரு, : வாரியங்களுக்கு தலைவர், துணை தலைவர், இயக்குனர்கள் நியமனத்துக்கு, தங்கள் ஆலோசனை பெறாமல், முதல்வர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள சில அமைச்சர்கள், முதல்வர் சித்தராமையா மீது, ராகுலிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய பதவி வழங்குவதற்காக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் ஆலோசனை கூட்டம், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்துள்ளது. காங்., செயல் தலைவர் சந்திரசேகர், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, சந்தோஷ் லாட், எம்.எல்.ஏ.,க்கள் ரிஸ்வான் அர்ஷத், ரூபகலா, ஹரீஷ்குமார், மூத்த தலைவர் சுதர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, வாரியம், கார்ப்பரேஷன்களுக்கு தலைவர், துணை தலைவர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் நியமனம் செய்வதற்கு, கட்சி பிரமுகர்களை தேர்வு செய்வதற்காக தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும், குழுவுக்கும் தெரியாமல் நியமனம் செய்யப்படுவதாக தலைவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.
முதல்வர் அலுவலகத்தில் இருந்தே நேரடியாக நியமனம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2013 - 2018 காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பதவி வகித்தவர்களுக்கே மீண்டும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது, 2ம், 3ம் கட்ட பிரமுகர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
பல்கலைக்கழகங்ளுக்கு சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனத்திலும் தங்களிடம் கேட்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா மீது, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் புகார் அளிக்க சில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, விரைவில் அதிருப்தி அமைச்சர்கள் பட்டாளம் டில்லி செல்ல உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசி கொள்கின்றனர்.