முதல்வர் பதவியை பிடிக்க தீவிரம்; 'துண்டு' போடும் அமைச்சர்கள்
முதல்வர் பதவியை பிடிக்க தீவிரம்; 'துண்டு' போடும் அமைச்சர்கள்
UPDATED : ஆக 22, 2024 05:59 AM
ADDED : ஆக 22, 2024 04:04 AM

பெங்களூரு; 'மூடா' வீட்டுமனை முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய சித்தராமையாவுக்கு பக்கபலமாக நிற்பது போன்று தோன்றினாலும், முதல்வர் பதவியை கைப்பற்ற, சில தலைவர்கள் திரைமறைவில் முயற்சிக்கின்றனர்.
'மூடா' முறைகேடு தொடர்பான விசாரணைக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னரிடம் புகார் அளித்த நாளில் இருந்தே, காங்கிரசில் பெரும் சூறாவளி வீசத் தொடங்கியது. முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தி, கவர்னரின் நோட்டீசை நிராகரிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இவர்களின் நெருக்கடிக்கு பணியாத கவர்னர், விசாரணைக்கு ஒப்புதல் அளித்தார்.
இது சித்தராமையா ஆதரவு அமைச்சர்களுக்கு வருத்தம் அளித்தாலும், சிலர் குஷி அடைந்துள்ளனர். குறிப்பாக முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளவர்களுக்கு, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொப்பளித்தது.
'மூடா' விஷயத்தில், முதல்வர் சித்தராமையாவுக்கு பக்கபலமாக நிற்கும்படி கட்சி மேலிடம் கட்டளையிட்டது. இதற்கு பணிந்து முதல்வருக்கு ஆதரவாக நிற்பதை போன்று, காண்பித்துக் கொண்டாலும் சித்தராமையா எப்போது முதல்வர் நாற்காலியை காலி செய்வார் என, காத்திருக்கின்றனர்.
அவர் காலி செய்தால் அதில் அமர, ஆவலோடு காத்திருக்கின்றனர். முதல்வர் பதவி எதிர்பார்ப்போரில், துணை முதல்வர் சிவகுமார் முதல் இடத்தில் உள்ளார். சட்டசபை தேர்தலில் தன் முழு உழைப்பு, திறமையை கொட்டி கட்சியை ஆட்சியில் அமர்த்தினார். ஆனால் முதல்வர் பதவியை, சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுக்க நேரிட்டது.
'மூடா' முறைகேடு வழக்கில், விசாரணையை எதிர்கொண்டுள்ளதால், மேலிடம் ராஜினாமா பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒருவேளை ராஜினாமா செய்தால், முதல்வர் பதவிக்கு உரிமை கொண்டாட சிவகுமார் காத்திருக்கிறார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், முதல்வர் கனவு காண்கிறார். மூத்த தலைவரான இவர், எப்போதும் கட்சி உத்தரவை மீறி நடந்து கொண்டது இல்லை. ஏற்கனவே தலித் சமுதாயத்தினருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, பலரும் குரல் கொடுப்பதால், சமுதாய பலத்தால் முதல்வராக முடியுமா என, கார்கே எதிர்பார்க்கிறார்.
தலித் முதல்வர் ரேசில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும் இடம் பெற்றுள்ளார். 2013ல் முதல்வராகும் யோகம் இருந்தும், கடைசி நேரத்தில் கை நழுவியது. அனுதாப அடிப்படையில் முதல்வர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறார். முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவானால், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என, நினைக்கிறார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு பின், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் தலைவராக முயற்சிப்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. தற்போது எம்.எல்.ஏ.,க்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருந்தால், எளிதாக முதல்வராகலாம் என்பது, சதீஷின் எண்ணம்.
அதேபோன்று, லிங்காயத்து சமுதாய பலத்துடன், முதல்வர் பதவியில் அமர தொழிற் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆர்வம் காண்பிக்கிறார்.