ADDED : ஜூலை 02, 2024 02:27 AM
ராயசோட்டி, ஆந்திராவில் போக்குவரத்து துறை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மண்டிப்பள்ளி ராம்பிரசாத் ரெட்டி உள்ளார். அவரது மனைவி ஹரிதா நேற்று கடப்பாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்வதற்காக, ராயசோட்டியில் உள்ள வீட்டில் தயாராக இருந்தார்.
அவருடன் செல்வதற்காக வரவிருந்த எஸ்.ஐ., ரமேஷ் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காரில் அமர்ந்தபடியே, எஸ்.ஐ.,யை அவர் சரமாரியாக திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
அதில், 'நிகழ்ச்சிக்கு செல்ல நேரமாகியும் ஏன் தாமதமாக வந்தாய். உனக்கு இன்னும் விடியவில்லையோ?
உனக்கு சம்பளம் தருவது யார்? நமது அரசா அல்லது முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., அரசா' என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் திட்டியபோதும் எந்த பதிலும் சொல்லாமல், அமைச்சரின் மனைவிக்கு, எஸ்.ஐ., சல்யூட் அடித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.