முதல்வர் பதவிக்கு அமைச்சர்கள் குஸ்தி... ; காங்., மேலிடத்துக்கு தொடரும் தலைவலி
முதல்வர் பதவிக்கு அமைச்சர்கள் குஸ்தி... ; காங்., மேலிடத்துக்கு தொடரும் தலைவலி
ADDED : செப் 09, 2024 05:20 AM

பெங்களூரு : முதல்வர் நாற்காலிக்காக, அமைச்சர்களுக்கு இடையே குஸ்தி ஆரம்பமாகியுள்ளது. 'நானே அடுத்த முதல்வர், நானே அடுத்த முதல்வர்' என, தம்பட்டம் அடிக்கின்றனர். இதனால், கட்சி மேலிடத்துக்கு தலைவலி தொடர்கிறது.
கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் அரசில், சித்தராமையா முதல்வராக இருக்கிறார். சமீப நாட்களாக, 'மூடா' முறைகேடு, அவரது பதவி நாற்காலியை ஆட்டம் காண வைத்துள்ளது.
சட்டத்தின் பிடி இறுகுவதால், அவர் எப்போது வேண்டுமானாலும் பதவியை ராஜினாமா செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலிடமும் கூட கட்சியின் இமேஜை காப்பாற்ற, சித்தராமையாவிடம் ராஜினாமா பெற ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மாற்றம் குறித்து, மேலிடமே ஆலோசிப்பதால் சில அமைச்சர்களுக்கும், முதல்வர் ஆசை துளிர் விட்டுள்ளது. நான், நீ என போட்டி போட்டு கொண்டு, முதல்வர் பதவிக்கு, 'துண்டு' போடுகின்றனர்.
முதல்வர் பதவி குறித்து, வாய் திறக்க கூடாது என, அமைச்சர்களுக்கு ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம், பல முறை எச்சரித்தது. அதன்பின் சில நாட்கள் மவுனமாக இருந்தனர். இப்போது ஒவ்வொருவராக வாயை திறக்கின்றனர். நானே அடுத்த முதல்வர் என, பதவிக்கு உரிமை கொண்டாடுகின்றனர்.
இதற்கிடையே சித்தராமையா ராஜினாமா செய்தால், சதீஷ் ஜார்கிஹோளியே அடுத்த முதல்வர் என, இவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். முதல்வராக சதீஷ் பதவி பிரமாணம் செய்வதை போன்று, போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளத்தில் பரவியது.
யார் அடுத்த முதல்வர் என்பதில், இவர்களுக்குள் பெரும் போட்டியே நடக்கிறது. இதற்கு முன் சில அமைச்சர்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக நின்றனர்.
'அவரே எங்கள் தலைவர். மாநிலத்தில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சி காலம் முடியும் வரை, அவரை முதல்வராக நீடிப்பார்' என, சூளுரைத்தனர். ஆனால் இப்போது இவர்களுக்கும், முதல்வராக ஆசை வந்துள்ளது.
பகிரங்கமாகவே பதவி ஆசையை வெளிப்படுத்தி, சித்தராமையாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றனர். சமீபத்தில் தேஷ்பாண்டேவும், முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறினார்.
முதல்வர் பதவிக்காக அமைச்சர்களுக்கு இடையே வாக்குவாதமும் நடக்கிறது. சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், தானும் அமைச்சராக விரும்புவதாக கூறினார். இதனால், கடுப்பான தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், நேற்று முன்தினம் ஊடகத்தினர் சந்திப்பில், 'நானும் மூத்த அமைச்சர்தான். விஜயபுரா மாவட்டத்துக்கு முதல்வர் பதவி வழங்குவதானால், நானே அடுத்த முதல்வர்' என்றார்.
இவருக்கு பதிலடி கொடுத்து, அமைச்சர் சிவானந்த பாட்டீல், நேற்று அளித்த பேட்டி:
அமைச்சர் எம்.பி.பாட்டீலை விட மூத்தவர்கள் காங்கிரசில் உள்ளனர். ஆட்சி காலம் முடியும் வரை, சித்தராமையாவே முதல்வராக இருப்பார். வளர்ச்சி பணிகள் விஷயமாக, பெங்களூரில் ஊடகத்தினரை சந்தித்தேன். ஆனால் ஊடகத்தினர் வளர்ச்சி பணிகளுக்கு பதிலாக, அரசியல் குறித்து கேள்வி எழுப்பினர். நானும் பதிலளித்தேன்.
சீனியருக்கு பின் ஜூனியர்கள் பதவிக்கு வருவர். எம்.பி.பாட்டீல் முதல்வரானால், எனக்கு ஆட்சேபம் இல்லை. யார் முதல்வர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி என, யார் வேண்டுமானாலும் முதல்வராகட்டும். நான் பேசியதை, சர்ச்சை ஆக்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
....புல் அவுட்....
முதல்வர் பதவி கேட்க, நான் டில்லிக்கு செல்லவில்லை. வேறு விஷயமாக சென்றிருந்தேன். அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், சிவானந்த பாட்டீல், தேஷ்பாண்டே தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். நான் இப்போது முதல்வராக கனவு காணவில்லை. 2028 வரை சித்தராமையா முதல்வராக இருப்பார். அதன்பின் முதல்வராக, நான் தயாராகிறேன். அதுவரை ஆதரவாளர்கள் பொறுத்திருக்க வேண்டும்.
- சதீஷ் ஜார்கிஹோளி, அமைச்சர், பொதுப்பணி துறை
--------
பாக்ஸ்...
-------
பா.ஜ., கிண்டல்
இது குறித்து, எக்ஸ் வலை தளத்தில் பா.ஜ., கூறியதாவது:
மூடா முறைகேட்டின் சூத்திரதாரி சித்தராமையா, ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் காங்கிரசில் முதல்வர் பதவிக்கு சூட் தைப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சித்தராமையாவுக்கு ஆதரவாக பாறை போன்று நிற்போம் என, கூறியவர்களே இப்போது நாங்களும் முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறோம் என்கின்றனர். சித்தராமையாவின் முதல்வர் நாற்காலிக்கு ஏற்பட்ட கண்டத்தை, அந்த விக்ன விநாயகராலும் தீர்க்க முடியாது.
மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே எபிசோட் முடிந்ததும், அமைச்சர் எம்.பி.பாட்டீல் தானும் முதல்வர் பதவியை விரும்புவதாக தண்டோரா அடிக்கிறார். வெளியே ஆதரவாக இருப்பதை போன்று காட்டி கொள்ளும், காங்கிரசில் சிலர் சித்தராமையா எப்போது முதல்வர் பதவியை காலி செய்வார் என, காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***