பாலக்காடு - -பொள்ளாச்சி- - ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் ரயில்வே அமைச்சகம் அனுமதி
பாலக்காடு - -பொள்ளாச்சி- - ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் ரயில்வே அமைச்சகம் அனுமதி
UPDATED : மார் 22, 2024 12:42 PM
ADDED : மார் 22, 2024 12:42 AM
பாலக்காடு:பல ஆண்டு காத்திருப்புக்கு பின், பாலக்காடு - -பொள்ளாச்சி- - பழனி வழித்தடத்தில் ராமேஸ்வரத்துக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.
பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு முன், கால அட்டவணை குழு பரிந்துரை செய்த மங்களூரு - -ராமேஸ்வரம் ரயில் சேவைக்கு, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வாராந்திர ரயிலாக இயங்கும் இந்த ரயிலின் வருவாயை மதிப்பிட்டு சேவையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ரயில் இயங்குவது தொடர்பாக தேதி மற்றும் நிறுத்தும் இடங்கள் குறித்து வரும் நாட்கள் முடிவெடுக்கப்படும்.
சனிக்கிழமை மாலை, 7:30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 2:00 மணிக்கு பாலக்காட்டிலும், காலை, 4:05 மணிக்கு பொள்ளாச்சியிலும், 11.45 மணிக்கு ராமேஸ்வரத்தையும் சென்றடைகிறது.மறு மார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம், 2:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு, 9:30 மணிக்கு பொள்ளாச்சியிலும், 10:55க்கு பாலக்காட்டிலும், மறுநாள் காலை, 5:50க்கு மங்களூரில் வந்தடையும் வகையில் இயக்க ஆலோசனை நடந்து வருகிறது.
காசர்கோடு, கண்ணுார், கோழிக்கோடு, சொரனுார், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படும்.
ஒரு பஸ்ட் ஏசி, இரண்டு செக்ண்ட் ஏசி, ஆறு ட்ரிபிள் ஏசி, 7 ஸ்லீப்பர், 6 ஜெனரல் உட்பட, 22 பெட்டிகள் இந்த ரயிலில் இருக்கும். ரயிலின் பராமரிப்பு பணிகள் மங்களூரு ரயில் நிலையத்தில் செய்யப்படும். சனி, ஞாயிறு தினங்களில் இயங்குவதால் விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்லவும், புனித யாத்திரை செல்வதற்கும் இந்த ரயில் உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

