ADDED : மே 10, 2026 11:32 PM
தோஹா, மே 11–
மேற்காசியாவில், அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கத்தார் கடலோரப் பகுதியில் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. ஈரானிய கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதும், பதிலுக்கு அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதும் தொடர்ந்து நீடிக்கிறது.
கடந்த வாரம் பாரசீக வளைகுடாவில் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 8ம் தேதி ஈரானிய துறைமுக முற்றுகையை மீற முயன்ற இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
‘அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் எதிரி கப்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்’ என, ஈரானிய புரட்சிகர காவல் படை எச்சரித்தது. மேலும், ஜலசந்தியை மீண்டும் திறப்பது, அணுசக்தி திட்டத்தை முடக்குவது தொடர்பான அமெரிக்காவின் புதிய முன்மொழிவுக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹா அருகே கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடந்தது. அதில், கப்பலில் சிறிய அளவில் தீ ஏற்பட்டது. அது உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.
