ADDED : ஆக 14, 2024 08:24 PM
புதுடில்லி:டில்லி ரோஹிணியில் காணாமல் போன 16 வயது சிறுமி, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மீட்கப்பட்டார். டில்லி ரோஹிணியில் வசிக்கும் ராகேஷ் குமார், ஜூலை 18ல் தன் 16 வயது மகள் வீட்டில் இருந்து காணாமல் போனதாக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
ராகேஷ் வீடு இருந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ராகேஷ் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் துருவித் துருவி விசாரித்தனர்.
கடந்த 9ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் சம்பாலில் ஒரு சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ராகேஷ் குமார் மற்றும் அவரது மனைவியுடன் டில்லி போலீசார் சம்பால் சென்றனர். அங்கு கண்டெடுக்கப்பட்டது தங்கள் மகள்தான் என ராகேஷ் தம்பதி கூறினர்.
ஆனால், சிறுமி உடல் உடற்கூறு ஆய்வு மற்றும் மரபணு சோதனை நடத்திய பிறகே அதை உறுதி செய்ய முடியும் என டில்லி போலீசார் கூறினர்.
இதற்கிடையில், டில்லியில் காணாமல் போன ராகேஷ் மகள் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இருந்து ராகேஷ் மகளை டில்லி போலீசார் மீட்டனர். விசாரணைக்குப் பின், ராகேஷ் குமாரிடம் அவரது மகளை ஒப்படைத்தனர்.