ADDED : ஆக 03, 2024 11:29 PM

விஜயபுரா: “தைரியம் இருந்தால் ஊழல் செய்த பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீது நடவடிக்கை எடுங்கள்,” என, முதல்வர் சித்தராமையாவுக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் சவால் விடுத்துள்ளார்.
விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் கொரோனா அதிகமாக இருந்த நேரத்தில், எடியூரப்பா முதல்வராக இருந்தார். அப்போது அவரது மகன் விஜயேந்திரா ஏராளமான ஊழல் செய்தார். அவர் செய்த ஊழல் வெளிவர வேண்டும். தைரியம் இருந்தால் விஜயேந்திரா மீது சித்தராமையா, சிவகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ஒப்பந்த அரசியல்
ஊழல் செய்தவர்களே ஊழலுக்கு எதிராக பாதயாத்திரை நடத்துவதால், எங்கள் ஆதரவு இல்லை. சிவகுமார், விஜயேந்திரா உள்ஒப்பந்த அரசியல் செய்வது 100 சதவீதம் உண்மை. பா.ஜ., ஆட்சியில் போவி சமூக மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கட்டும்.
மவுனம்
எடியூரப்பா மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நியாயப்படி பார்த்தால் அவர் எந்த மேடைக்கும் வரக் கூடாது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் பற்றி பேசாமல், கர்நாடகா பா.ஜ., தலைவர் மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் தலித் அதிகாரிகள் மரணம் அதிகரித்து வருகிறது.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழலில் அதிகாரி சந்திரசேகர் இறந்தார். இப்போது எஸ்.ஐ., பரசுராம் உயிரிழந்துள்ளார். ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் மட்டும் பதவி விலகினால் போதாது. ஒட்டுமொத்த அரசும் ஆட்சியில் இருந்து விலக வேண்டும். மீண்டும் தேர்தலுக்கு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.