ADDED : ஜூலை 08, 2024 06:34 AM

மைசூரு: ''மூடா முறைகேட்டில் எனக்கு தொடர்பு இருப்பதை நிரூபித்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என்று, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமசேகர் சவால் விடுத்துள்ளார்.
மைசூரு, 'மூடா' சார்பில் பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றன.
ஆனால் பா.ஜ., ஆட்சியில் தான் முறைகேடு நடந்ததாகவும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சோமசேகருக்கு தொடர்பு உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சராக நான் இருந்தபோது, மூடாவில் நடந்த முறைகேட்டில் எனக்கு தொடர்பு இருப்பதாகவும், பினாமி பெயரில் நிலம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை கூறுவோர், அதை உண்மை என்று நிரூபித்தால், எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன்.
மூடாவில் முறைகேடு நடப்பதாக, அமைச்சராக இருந்தபோது எனக்கு தகவல் கிடைத்தது. இதனால் மூடா தலைவராக இருந்தவரை மாற்ற வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுத்தேன்.
ஆனால் அவரோ, ஜாதி அடிப்படையில் அந்தப் பதவியை தக்க வைத்து கொண்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.