பரப்பன அக்ரஹாரா சிறையில் மொபைல் ஜாமர்; 'நெட்ஒர்க்' கிடைக்காமல் மக்கள் போராட்டம்
பரப்பன அக்ரஹாரா சிறையில் மொபைல் ஜாமர்; 'நெட்ஒர்க்' கிடைக்காமல் மக்கள் போராட்டம்
ADDED : மே 17, 2024 05:50 AM

பரப்பன அக்ரஹாரா : பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மொபைல் போன் ஜாமர் வைத்துள்ளதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் மத்திய சிறை அமைந்துள்ளது. கைதிகள், சட்ட விரோதமாக சிறைக்குள் இருந்து வெளியில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு மொபைல் போன் மூலம் கொலை, கொலை முயற்சி போன்ற தகவல்களை பரிமாறி கொள்கின்றனர்.
இதை கட்டுப்படுத்த, சிறைக்குள் மொபைல் போன் ஜாமர் வைக்கப்பட்டுள்ளது. சிறையை சுற்றி 2 கி.மீ., சுற்றளவுக்கு மொபைல் நெட் ஒர்க் கிடைக்காது. இதனால் சிறையை சுற்றி வசிப்போர் சிரமப்படுகின்றனர்.
ஜாமரை அகற்ற கோரி, இப்பகுதி மக்கள், நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
மொபைல் போன் ஜாமர்கள் உள்ளதால், இங்கு வாடகை வீட்டில் வசித்தவர்கள், வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சுக்கு போன் செய்ய முடியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆம்புலன்சுக்கு போன் செய்ய முயற்சித்து, நெட்ஒர்க் கிடைக்காததால் இதய நோயாளி ஒருவர், வீட்டிலே உயிரிழந்தார்.
இப்பகுதியில் அதிகளவில் சர்வதேச மென் பொருள் நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் பலர், இப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். நெட்ஒர்க் பிரச்னையால் ஊபர், ஓலா போன்ற வாகனங்கள் கிடைக்காமல், கடைகளில் பொருட்கள் வாங்கினால் கூகுள் பே, போன் பே கட்ட முடியாமல், வீட்டில் இருந்து பணியாற்ற இணைய வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இவர்கள் தற்போது வேறு பகுதிக்கு குடியேறியதால், வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி, வாடகைக்கு விட்டவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிறைக்குள் ஜாமர் பொருத்த வேண்டும். சிறைக்கு வெளியே பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***

