ADDED : ஆக 20, 2024 08:51 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் ரஷ்ய தூதரக பெண் அதிகாரியிடம் மொபைல் போனை பறித்துச் சென்ற திருடனை போலீசார் தேடுகின்றனர்.
டில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், வடக்கு டில்லி காஷ்மீரி கேட் அருகே செங்கோட்டைக்கு 17ம் தேதி மாலை 4:30 மணிக்கு வந்தார். செங்கோட்டைக்குப் பின்னால் உள்ள கல்லறைகளை தன் மொபைல் போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் ரஷ்ய பெண்ணிடம் இருந்து மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதைத் தொடர்ந்து காஷ்மீரி கேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ரஷ்ய பெண், நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரியிடம் கூறி, இது தொடர்பாக இ-மெயில் அனுப்புவதாக கூறினார்.
காஷ்மீரி கேட் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 304 (2)/3/5 (அபகரிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி திருடனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
