ADDED : மே 02, 2024 06:21 AM
பெங்களூரு: ஷிவமொகா மத்திய சிறையில், கைதி ஒருவரின் வயிற்றில் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப்பட்டது.
ஷிவமொகாவின், ராஜிவ்காந்தி லே அவுட்டில் வசிக்கும் பரசுராம், 35, குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்று, ஷிவமொகா, சோகானேவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 28ல் இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். சில நாட்களுக்கு பின் மீண்டும் வயிற்று வலி அதிகரித்தது. ஷிவமொகாவின் மெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்குள்ள தலைமை மருத்துவ அதிகாரி சிபாரிசுபடி விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த மருத்துவமனையில் இவரை பரிசோதித்த டாக்டர்கள், கல்லை விழுங்கியிருக்கலாம் என, சந்தேகித்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் மொபைல் போன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, போனை வெளியே எடுத்தனர்.
சிறையில் கைதிகள் மொபைல் போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கைதி பரசுராமின் வயிற்றில் மொபைல் போன் கிடைத்ததால், அதை அவர் விழுங்கியது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, அவர் மீது ஷிவமொகா சிறைத்துறை அதிகாரிகள், துங்கா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

