ADDED : ஜூலை 09, 2024 12:46 AM

புதுடில்லி,உயரமான மலை பிராந்தியங்களில், சீனாவின் சவாலை முறியடிக்கும் வகையில், 'ஜோர்வார்' என்ற இலகு ரக போர் பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
வெறும் இரண்டே ஆண்டுகளில், குஜராத்தின் ஹசிரா பகுதியில் உள்ள 'எல் அண்டு டி' ஆலையில் இந்த பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., மற்றும் 'எல் அண்டு டி' நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிஉள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போரில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, மலைப்பகுதிகள் மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வேகமாகச் செயல்படும்படி இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டு உள்ளது; இதன் எடை 25 டன்.
முதற்கட்டமாக 59 பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படுவதாகவும், இரண்டாம் கட்டமாக 295 பீரங்கிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த சோதனைகள் முடிவடையும்.