ADDED : ஏப் 14, 2024 07:10 AM

ஷிவமொகா: ''தந்தையை வனவாசத்துக்கு அனுப்பிய ராமபக்தர்கள் இங்குள்ளனர்,'' என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் குற்றஞ்சாட்டினார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
ஸ்ரீராமன் கடவுள். அவர் அனைவரையும் காப்பாற்றுகிறார். ராமபக்தர்கள் என, கூறிக் கொள்ளும் சிலர், ஸ்ரீராமனை விலக்கி வைத்துள்ளனர். அந்த ராமன், தன் தந்தை தசரதன் பேச்சுக்கு மதிப்பளித்து வனவாசம் சென்றார்.
ஆனால் இன்றைய ராம பக்தர்கள் (ராகவேந்திரா, விஜயேந்திரா) தசரதனையே (எடியூரப்பா) வனவாசத்துக்கு அனுப்பியது துரதிர்ஷ்டம்.
ராம பக்தர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தான். ராமனை வீதிக்கு கொண்டு வந்து தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.,வினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக கூறினர். ராமர் கோவிலைக் கட்ட, இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் பணம் கொடுத்தனர். இந்த கோவில் பா.ஜ.,வினர் கட்டியது அல்ல. பக்தர்கள் கொடுத்த பணத்தால் கட்டியது.
ராமர் கோவில் கட்ட, நாட்டு மக்கள் செங்கல், இரும்பு கொடுத்தனர். கோவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மக்கள் கொடுத்த செங்கல், இரும்பு எங்கு போனது?
மத்திய அரசு, மாநிலத்துக்கு துரோகம் செய்கிறது. அரசியல் நோக்கில் பழி வாங்குகிறது. வறட்சி காலத்தின்போது, ராகவேந்திரா உட்பட, எந்த எம்.பி.,க்களும் மத்திய அரசிடம் நிதியுதவி பெற்று வருவது குறித்து பேசவில்லை.
மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசு அடக்கு முறையை கையாள்கிறது. கஷ்ட காலத்தில் உதவாத பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா போன்றோர், எந்த முகத்தை வைத்துக்கொண்டு மாநிலத்தில் ஓட்டுக் கேட்க வருகின்றனர்.
வறட்சி நிவாரணம் கேட்டு, ஒரு மாநில அரசு, நீதிமன்றத்தை நாடியது, இதுவே முதன் முறை.
இவ்வாறு அவர் கூறினார்.

