மோடி அசத்தல்! :75 நாட்களில், 200 கூட்டங்கள், 80 பேட்டிகள்: லோக்சபா தேர்தலுக்காக மாரத்தான் பிரசாரம்
மோடி அசத்தல்! :75 நாட்களில், 200 கூட்டங்கள், 80 பேட்டிகள்: லோக்சபா தேர்தலுக்காக மாரத்தான் பிரசாரம்
ADDED : மே 31, 2024 12:18 AM

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, தன் 75 நாள் தொடர் தேர்தல் பிரசாரத்தை, பஞ்சாபின் ஹோஷியார்புரில் நேற்று நிறைவு செய்தார். மார்ச் 16ல் பிரசாரத்தை துவக்கிய அவர், 200 பொதுக்கூட்டங்கள், 80 பேட்டிகள் அளித்து அசத்தி உள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாபின் ஹோஷியார்புர் லோக்சபா தொகுதியில், தன் பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார். மார்ச் 16ம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி, 75 நாட்கள் தொடர்ந்து மாரத்தான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விமர்சனம்
கடந்த 75 நாட்களில், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து 200 பொதுக் கூட்டங்கள், சாலைப் பேரணிகளில் பங்கேற்றார். முதன்மையான நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், 'டிவி சேனல்'கள் உட்பட 80க்கும் அதிகமான பேட்டிகளை அளித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பிரதமர் பங்கேற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற பிரதமரின் விமர்சனம், இந்த தேர்தலில் பேசு பொருளானது.
குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி ராமர் கோவில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவை பா.ஜ., அரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் நிறைவின் போதும், பயணம் மேற்கொள்வது பிரதமரின் வழக்கம்.
கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்ததும், மஹாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்காட் மலைக்கோட்டைக்கு பிரதமர் சென்றார். 1659, நவ., 10ல் நடந்த போரில், பிஜாபூர் சமஸ்தானத்தை ஆண்ட சுல்தான் அப்சல் கானை, மராத்திய மன்னர் மாவீரர் சிவாஜி தோற்கடித்தார்.
தியானம்
அந்த கோட்டையில் சில தினங்கள் பிரதமர் தங்கியிருந்தார். 2019 தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததும், உத்தரகண்டின் கேதார்நாத்தில் உள்ள குகையில் தியானத்தில் ஈடுபட்டார்.
இந்த முறை, தமிழகத்தின் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தா பாறையில் தியானத்தில் ஈடுபட்டு உள்ளார்.
நேற்று மாலை துவங்கிய பிரதமரின் தியானம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.