ADDED : ஏப் 28, 2024 12:09 AM

கோலாப்பூர்: மஹாராஷ்டிராவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தி.மு.க., மற்றும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் காங்கிரசுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மஹாராஷ்டிராவில் உள்ள, 48 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. கோலாப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மஹராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, உண்மையில் போலி சிவசேனா.
அதன் நிறுவனர் பாலாசாஹேப் பால் தாக்கரேயின் ஆன்மா எங்கிருந்தாலும், கட்சியின் தற்போதைய நிலைக்கு, அதன் கொள்கைகளுக்கு நிச்சயம் வருத்தப்படும்.
இவர்கள் யாருடன் கூட்டணி வைத்துள்ளனர் என்பது தெரியுமா? சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவ்வாறு பேசியதற்காக அந்த கட்சி தலைவர்களை மும்பைக்கு வரவழைத்து, பாராட்டு விழா நடத்தினர்.
நாட்டை வடக்கு மற்றும் தெற்காக பிரிக்க வேண்டும் என கேட்கும், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்து உள்ளார்.
கர்நாடகாவில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களையும் ரகசியமாக காங்கிரஸ் சேர்த்து உள்ளது.
நாடு முழுதும் இதை செயல்படுத்த துடிக்கிறது. அந்த கட்சியுடன், உத்தவ் கூட்டணி வைத்துள்ளார். இவர்களுடைய இண்டியா கூட்டணி, இந்த தேர்தலில் மூன்று இலக்க தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து பிரதமர்கள் ஆட்சி செய்வது தொடர்பாக பேசி வருகின்றனர்.
இதை மஹாராஷ்டிரா மற்றும் நாட்டு மக்கள் ஏற்க மாட்டர்கள். அதனால், இவர்கள் மீதான தங்களுடைய கோபத்தை மக்கள், தேர்தலில் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

