மோடி நாளை வேட்பு மனு தாக்கல்: கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு
மோடி நாளை வேட்பு மனு தாக்கல்: கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 13, 2024 07:49 AM

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, சேலத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'வாரணாசியில் நான் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, நீங்கள் அனைவரும் வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அத்துடன், பா.ஜ., ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் புடை சூழச் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்; நிகழ்வை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும், மோடி விரும்பினார்.
அதற்கேற்ப, அந்தந்த மாநில பா.ஜ., தலைவர்கள் வாயிலாக, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இருந்து பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.முக., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நாளை வாரணாசி செல்கின்றனர்.
அன்புமணியை அனுப்பிய மோடி
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் நடக்கும் சட்டசபை தேர்தலில், குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு, தமிழர்கள் குறிப்பாக, வன்னியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
இதையடுத்து, அங்கு சந்திரபாபுவுக்காக, பா.ம.க., சார்பில் அன்புமணியோ, ராமதாசோ, பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டது. பிரதமர் மோடி, அன்புமணியிடம் பேசினார். இதையடுத்தே, ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு சென்று, சந்திரபாபுவுக்காக அன்புமணி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- நமது நிருபர் -