அம்மா சத்தியமா தெரியாது! நடிகர் சிவராஜ்குமார் அதிரடி
அம்மா சத்தியமா தெரியாது! நடிகர் சிவராஜ்குமார் அதிரடி
ADDED : மார் 25, 2024 06:37 AM

ஷிவமொகா: ஷிவமொகாவில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் கீதாவை ஆதரித்து, அவரது கணவரும், நடிகருமான சிவராஜ்குமார் பிரசாரம் செய்து வருகிறார்.
ஷிவமொகாவில் நேற்று பிரசாரத்திற்கு பின்னர், சிவராஜ்குமார் அளித்த பேட்டி:
அரசியல் என்பது மூளை சம்பந்தமான விளையாட்டு இல்லை. இதயபூர்வமானது. எதையும் நேர்பட பேசுவது எனது வழக்கம். முன்னால் ஒன்று பேசிவிட்டு, பின்னால் சென்று வேறு மாதிரி பேசும் குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை. மனதில் தோன்றுவதை பேசுகிறேன்.
ஷிவமொகாவில் வெற்றி பெற்றால், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று, நானும், கீதாவும் நிறைய விவாதித்து உள்ளோம். கர்நாடக அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு. நான் தமிழகம் சென்ற போது, எனது நண்பர்கள் சிலர், நமது மாநில அரசியலில் பெண்களுக்கு ஏன், முக்கியத்துவம் அளிக்கப்படுவது இல்லை என்று கேட்டனர்.
கர்நாடக காங்கிரஸ் இம்முறை ஆறு பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளது. வரும் தேர்தல்களில் பெண்களுக்கு இன்னும் நிறைய, வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஷிவமொகாவில் கீதாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த முறை அவர் போட்டியிட்டு தோற்ற போது, எங்களிடம் சரியான திட்டமிடல் இல்லை. ஆனால் இம்முறை தெளிவாக இருக்கிறோம். மக்களும் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. அஸ்வினி புனித்ராஜ்குமாரை, மத்திய அமைச்சர் ஷோபா சந்தித்து, ஆதரவு கேட்டதில் தவறு இல்லை.
கீதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதால், நான் நடித்த திரைப்படங்களை தேர்தல் முடியும் வரை, வெளியிட கூடாது என்று, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது பற்றி, என்னிடம் தகவல் இல்லை.
புகார் கொடுத்தது பற்றி, அம்மா சத்தியமாக எனக்கு தெரியாது. நடிகராக இருப்பதால், அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று, அர்த்தம் இல்லை. எனக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லை. கீதாவுக்கு ஆர்வம் உள்ளது. அவரை ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

