பணம் முறைகேடு வழக்கு 'மாஜி' எம்.எல்.ஏ., விடுவிப்பு
பணம் முறைகேடு வழக்கு 'மாஜி' எம்.எல்.ஏ., விடுவிப்பு
ADDED : ஜூலை 25, 2024 10:55 PM

சித்ரதுர்கா: முருகா மடத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, முன்னாள் எம்.எல்.ஏ., பசவராஜன் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
சித்ரதுர்கா ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., பசவராஜன். சித்ரதுர்கா முருகா மடத்தின் நிர்வாகியாக இருந்தார். மடத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக கடந்த 2013ல் பசவராஜன் மீது, சித்ரதுர்கா டவுன் போலீசில், மடத்தின் ஊழியர் விஜயகுமார் புகார் செய்தார்.
பசவராஜன் மீது வழக்கு பதிவானது. தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். 11 ஆண்டுகளாக நடந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ப்ரீத் நேற்று தீர்ப்பு கூறினார்.
மடத்தின் பணத்தை பசவராஜன் முறைகேடு செய்ததற்குரிய ஆதாரத்தை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, அவரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

