தென் மாநிலங்களில் அதிக இடங்கள்: பிரதமர் மோடி உறுதி
தென் மாநிலங்களில் அதிக இடங்கள்: பிரதமர் மோடி உறுதி
ADDED : ஏப் 30, 2024 01:30 AM

புதுடில்லி, ''தென் மாநில மக்கள் என் மீது அதிக அன்பு காட்டினர். முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரபல ஆங்கில நாளிதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தென் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதற்காக நாங்கள் அதிக முயற்சி மேற்கொண்டோம் என்று கூறுவதை விட, மக்கள் எங்கள் மீது அதிக அன்பு காட்டினர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
இந்திய கலாசாரம்
தென் மாநிலங்கள் முழுதும் பா.ஜ.,வுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்ததை நேரடியாக காண முடிந்தது.
காங்கிரஸ் அல்லது மாநில கட்சிகள் மட்டுமே தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்துள்ளன. அவர்களின் ஊழல், குடும்ப அரசியல், மோசமான நிர்வாகம், பிரிவினை மற்றும் ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே மக்கள் கண்டு உள்ளனர்.
இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பை மக்கள் கண்கூடாக பார்த்துள்ளனர். இதனால், காங்., மற்றும் மாநில கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் ஆட்சியை மக்கள் கவனித்து வருகின்றனர். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்று சேர்கின்றன.
எனவே, பா.ஜ., மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மாற்றுக் கட்சியாக எங்களை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
கடந்த 2019ல் தென்மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வென்ற பா.ஜ., இந்த முறை அதிக ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெறும். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நலத்திட்டங்கள்
இதற்கிடையே, மஹாராஷ்டிராவின் சோலாபூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ''இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் பதவி வகிப்பது என்பதில் மிகப் பெரிய யுத்தம் நடக்கிறது.
''ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருவர் என்ற முறையில் நாட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டுஉள்ளனர்.
''ஆனால் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலிலேயே அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டதை அவர்கள் அறியவில்லை,'' என்றார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவிலும் பிரதமர் நேற்று பிரசாரம் செய்தார்.

