ADDED : மார் 05, 2025 11:07 PM
பெலகாவி: குடிகார கணவரின் தொந்தரவு தாங்காமல், தன் மூன்று குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெலகாவி மாவட்டம், ராய்பாகின், சிஞ்சலியில் வசிப்பவர் அசோக் டாலி, 38. இவரது மனைவி சாரதா, 32. தம்பதிக்கு அம்ருதா, 14, அனுஷா, 5, என்ற மகள்களும், ஆதர்ஷ், 8, என்ற மகனும் இருந்தனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான அசோக், தான் சம்பாதிக்கும் பணத்தை, மது வாங்கவே செலவிட்டார். நாளடைவில் எந்த வேலைக்கும் செல்லாமல், குடிபோதையிலேயே இருந்தார்.
வீட்டின் பெரியவர்கள் புத்திமதி கூறியும், அசோக் திருந்தவில்லை. வேறு வழியின்றி சாரதா, வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
குடிக்க பணம் கேட்டு, தினமும் அவரை அசோக் இம்சிக்கத் துவங்கினார். பணம் தர மறுத்தால், மனம் போனபடி சாரதாவை தாக்கினார். கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதனால் மனம் நொந்த சாரதா, நேற்று காலை தன் பிள்ளைகளுடன், ராய்பாகில் உள்ள கிருஷ்ணா ஆற்றுக்கு வந்தார். பிள்ளைகளை ஆற்றில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட அப்பகுதியினர், தாய், பிள்ளைகளை காப்பாற்ற முயற்சித்தனர். அனுஷாவை மட்டும் மீட்க முடிந்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
தகவலறிந்து அங்கு வந்த குடச்சி போலீசார், தாய், பிள்ளைகளின் உடல்களை தேடுகின்றனர். இவர்களின் தற்கொலைக்கு காரணமான அசோக்கை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.